வெள்ளி, 11 நவம்பர், 2016

55 ஆண்டுகள்... 1000 திரைப்படங்கள்! எறக்குறைய ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக வசனங்களைப் பேசிய தமிழ் சினிமா அதன்பிறகுதான் காட்சி ஊடகமாக மாறத் தொடங்கியிருக்கிறது. இந்த ஐம்பது ஆண்டுகளில் சுமார் 1000 படங்களுக்கு மேல் வசனம் எழுதியவர் ஆரூர்தாஸ்.

55 ஆண்டுகள்... 1000 திரைப்படங்கள்!
எறக்குறைய ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக வசனங்களைப் பேசிய தமிழ் சினிமா அதன்பிறகுதான் காட்சி ஊடகமாக மாறத் தொடங்கியிருக்கிறது. இந்த ஐம்பது ஆண்டுகளில் சுமார் 1000 படங்களுக்கு மேல் வசனம் எழுதியவர் ஆரூர்தாஸ்.

"பாசமலர்', "விதி', "அன்பே வா' போன்ற படங்களின் வசனங்களை தமிழ் சினிமா ரசிகர்கள் அவ்வளவு எளிதாக மறக்கவில்லையென்றால் ஆரூர்தாûஸயும் மறந்திருக்க வாய்ப்பில்லை. தமிழ் சினிமாவின் இரு பெரும் ஆளுமைகளான எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்களுக்கு ஒரே நேரத்தில் வசனம் எழுதிய பெருமை ஆரூர்தாûஸ மட்டுமே சேரும் என்றால் அது மிகையில்லை. வெயில் பதுங்கியிருந்த ஒரு மாலை நேரத்தில், தி.நகர் இல்லத்தில் அவரைச் சந்தித்தோம்.

""நாகப்பட்டிணத்தில் 1931ல் பிறந்தேன். என் அப்பா எஸ்.ஏ.சந்தியாகு நாடார், அம்மா ஆரோக்கியமேரி அம்மாள். நான் குடும்பத்தில் மூத்த மகன். திருவாரூர் கழக உயர்நிலைப் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி.படித்தேன். என்னுடைய பள்ளியில் கலைஞர் கருணாநிதி எனக்கு ஆறு வருடம் சீனியர். முரசொலிமாறன் எனக்கு இரண்டு வருட ஜூனியர். வளர்ந்து, வாழ்ந்தது எல்லாம் திருவாரூர்தான்.

ஜேசுதாஸ் என்கிற பெயரில் வேளாங்கன்னியில் ஞானஸ்நானம் பெற்றேன். என்னுடைய தகப்பனாருக்கு தமிழின் மீது ஆர்வம், அதில் புலமையும் உண்டு. ஆகவே, அப்பாவையே நானும் பின் பற்றி தமிழ் மீது மிகுந்த பற்று வைத்தேன். ஆறாம் வகுப்பு படிக்கும்போதே தமிழில் மிகுந்த ஆர்வம் உள்ள மாணவனாக எல்லோராலும் பள்ளியில் அறியப்பட்டேன். அப்போதே சிறுகதைகள் எழுதவும் ஆரம்பித்தேன். அப்போது என்னுடைய மனதில் தமிழ் படித்து, புலவர் பட்டம் பெற்று, தமிழாசிரியர் ஆக வேண்டும் என்னும் குறிக்கோள்தான் இருந்தது. என்னுடைய தகப்பனாரும் என்னுடைய ஆர்வத்தைப் புரிந்துகொண்டு எனக்கு ஊக்கம் கொடுத்தார்.

1964ம் ஆண்டு என்னுடைய 22ம் வயதில் என் சொந்த அத்தை மகளான லூர்து மேரியை திருமணம் செய்து கொண்டேன். திருவாரூரில் என்னுடைய நண்பர்களையெல்லாம் சேர்த்துக்கொண்டு "சின்னப்பா நாடக மன்றம்' என்கிற பெயரில் நாடகக் குழு ஒன்றை நடத்தி வந்தேன். அதில் சமூக சீர்திருத்த கருத்துகள் நிறைந்த நாடகங்களையெல்லாம் நடத்தினேன். அத்துடன் தமிழ் மீதும் தீவிர கவனம் செலுத்திக்கொண்டு வந்தேன்.

என்.பி.முருகப்பா மூலம் தஞ்சை ராமய்யா தாஸ் அவர்களிடம் அறிமுகமாகி, அவரிடம் மாதம் ஐம்பது ரூபாய் சம்பளத்திற்கு உதவியாளராகச் சேர்ந்தேன். தமிழ் சினிமாவில் என்னுடைய ஆசான் அவர்தான். அவரிடமிருந்துதான் பிற இந்திய மொழிகளில் இருந்து படங்களை தமிழுக்கு டப்பிங் செய்வதை கற்றுக் கொண்டேன். அதன்மூலம் ஏராளமான படங்களை தமிழில் மொழிமாற்றம் செய்யும் வாய்ப்பையும் பெற்றேன். "ஸ்ரீ ராமபக்த ஹனுமான்' மூலம் தமிழ் சினிமாவில் அடையாளம் கிடைத்தது.
முதன்முதலில் ஹிந்தியிலிருந்து தமிழுக்கு மொழி பெயர்த்த படம் "மகுடம் காத்த மங்கை'. அந்த சமயத்தில் பின்னணிக் குரல் ராஜு மூலம் அமரர் தேவர் பிலிம்ஸ் அதிபர் சான்ட்டோ எம்.எம்.ஏ.சின்னப்பா தேவரின் அறிமுகம் கிடைத்தது.

அதன்மூலம் "வாழ வைத்த தெய்வம்' படத்திற்கு கதை-வசனம் எழுதும் வாய்ப்பை பெற்றேன். இந்தப் படம் 1958ல் தயாரிக்கப்பட்டது. இதில் ஜெமினி கணேசனும், சரோஜா தேவியும் நடித்திருந்தார்கள். இப்படத்தைத் தொடர்ந்து தேவர் பிலிம்ஸின் ஆஸ்தான வசனகர்த்தாவாக மாறிப்போனேன்.

"உத்தமி பெற்ற ரத்தினம்', "கொங்கு நாட்டு தங்கம்' போன்ற படங்களுக்கு வசனம் எழுதினேன்.
அந்த சமயத்தில் (1959) ஜெமினி கணேசன் என்னை அழைத்துக்கொண்டு போய் நடிகர் திலகம் சிவாஜி கணேசனிடம் அறிமுகப்படுத்தி வைத்தார். அதன்மூலம் "பாசமலர்' படத்திற்கு வசனம் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. "பாசமலர்' (1961) படம் எனக்கு பெரிய புகழைப் பெற்று தந்தது. இதைத் தொடர்ந்து "படித்தால் மட்டும் போதுமா', "பார்த்தால் பசி தீரும்',"பார் மகளே பார்', "அன்னை இல்லம்', "புதிய பார்வை', "தெய்வமகன்', "அன்பளிப்பு, "பைலட் பிரேம்நாத்' போன்ற சிவாஜி கணேசன் நடித்த 28 படங்களுக்கு வசனம் எழுதக்கூடிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

இந்தியாவில் ஒரே கதாநாயகனுக்கு ஒரே வசனகர்த்தா இவ்வளவு படங்களுக்கு எழுதியதில்லை. இது ஒரு அரும்பெரும் சாதனையாகும். இதன்மூலம் சிவாஜிகணேசனுக்கு ஆஸ்தான கதையாசிரியராக இருந்து ஏராளமான படங்களுக்கு வசனம் எழுதினேன். இதற்கு காரணம் ஜெமினி கணேசன்தான்!

இதையொட்டியே 1960-61ல் தேவர் அவர்கள் மூலமாக எம்.ஜி.ஆரின் அறிமுகம் கிடைத்தது. முதன் முதலாக எம்.ஜி.ஆரின் "தாய் சொல்லை தட்டாதே' படத்துக்கு கதை-வசனம் எழுதினேன். இந்தப் படம் மகத்தான வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து தேவர் தயாரித்த "தாயைக் காத்த தனயன்', "குடும்பத் தலைவன்', "நீதிக்குப் பின் பாசம்',"வேட்டைக்காரன்', "தொழிலாளி', "தனிப்பிறவி', "தாய்க்கு தலைமகன்' போன்ற எம்.ஜி.ஆர். நடித்த
தேவர் பிலிம்ஸ் படங்களுக்கும் மற்றும் எம்.ஜி.ஆர். நடித்த "அன்பே வா', "ஆசை முகம்', "தாலிபாக்கியம்', "தாழம்பூ', "பெற்றால்தான் பிள்ளையா' போன்ற எம்.ஜி.ஆரின் பல வெற்றிப் படங்களுக்கும் கதை-வசனம் எழுதினேன்.

அந்தக் காலத்தில் எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகிய இருவருக்கும் ஒரே சமயத்தில் பல வெற்றி படங்களுக்கு வசனம் எழுதும் வாய்ப்பு அன்னையின் அருளால் என் ஒருவனுக்கு மட்டுமே கிடைத்தது.

உதாரணமாக 1962ல் தமிழ் வருடப் பிறப்பு நாளில் எம்.ஜி.ஆர். நடிப்பில், தேவர் பிலிம்ஸ் தயாரித்த "தாயைக் காத்த தனயன்', சிவாஜி நடித்த "படித்தால் மட்டும் போதுமா' ஆகிய இரு படங்களும் ஒரே நாளில் வெளியாகி நூறு நாட்கள் ஓடியது. எனக்குப் புகழையும் தேடித் தந்தது. அடுத்த ஆண்டு 1963ல் தீபாவளியன்று ஒரே நாளில் எம்.ஜி.ஆர்.நடித்த "பரிசு', சிவாஜி நடித்த "அன்னை இல்லம்' இரண்டும் வெளியாகி நூறு நாட்கள் ஓடி, வெற்றிப் பெற்றது.

1964ல் எம்.ஜி.ஆர். நடிப்பில், தேவர் பிலிம்ஸ் தயாரித்த "வேட்டைக்காரன்', சிவாஜி பிலிம்ஸின் முதல் வண்ணப்படமான "புதிய பறவை' அடுத்தடுத்து வெளியாகி மேலும் மேலும் எனக்கு புகழைத் தேடித் தந்தது. இப்படியாக எம்.ஜி.ஆர்., சிவாஜி ஆகிய இரு பெரும் நடிகர்களின் நிறைய வெற்றிப் படங்களுக்கு வசனம் எழுதியதன் மூலம் தமிழ் திரைப்பட வசனகர்த்தாக்களில் முதன்மை பெற்று முன்னணியில் இருந்தேன்.

"பூ ஒன்று புயலானது', "இதுதாண்டா போலீஸ்', "அம்மன்', "வைஜெயந்தி ஐ.பி.எஸ்.', "மை டியர் குட்டிசாத்தான்' போன்ற படங்களுக்கு தமிழில் வசனம் எழுதும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இது போன்று நூற்றுக்கும் மேற்பட்ட மொழி மாற்றுப் படங்களுக்கு வசனம் எழுதியிருக்கிறேன்.
திரைப்படங்களுக்கு வசனங்கள் எழுதியதைப் போலவே நிறைய இலக்கியங்களையும் எழுதியிருக்கிறேன். "திருக்குறள் அகராதி', "ஒரு கதை வசனகர்த்தாவின் கதை', "நாற்பது திரைப்பட இயக்குநர்களும் நானும்' ஆகிய நூல்கள் முக்கியமானவை. இவற்றில் முக்கியமானது நான் எழுதி, விகடன் பிரசுரம் வெளியிட்ட "சிவாஜி வென்ற சினிமா ராஜ்ஜியம்' நூல் முக்கியமானது. இந்த நூல் இதுவரை மூன்று பதிப்புகள் வெளியாகியிருக்கிறது. விற்பனையிலும் சாதனைப் படைத்திருக்கிறது.

1971-72க்கான சிறந்த திரைப்பட கதை-வசனகர்த்தாவாக தமிழக அரசு தேர்ந்தெடுத்து, கலைமாமணி விருதும், பொற்பதக்கமும் வழங்கியது. அதனையடுத்து 1996ல் தமிழக அரசு அறிஞர் அண்ணா விருதுடன் கூடிய "கலை வித்தகர் பட்டமும்', ஐந்து சவரன் பொற்பதக்கமும் வழங்கி என்னை கெüரவித்தது. 2005 -ல் நல்லி குப்புசாமி செட்டியாரின் பிரம்மகான சபா எனது "முத்தமிழ் கொத்து', "என் கரையைத் தொட்ட கலை அலை', "ஓ என் இனிய உலகமே' ஆகிய மூன்று நூல்களை வெளியிட்டு "சாதனை நாயகர்' என்ற விருதும் வழங்கியது. இது போன்று மேலும் பல விருதுகளையும் பெற்றிருக்கிறேன்.

வருகிற செப்டம்பர் 10ம் தேதி என்னுடைய "சதாபிஷேக பிறந்த நாள் விழா'வை நல்லி குப்புசாமி செட்டியார் அவர்கள் எனக்கு பாராட்டு விழா நடத்தி, சிறப்பிக்க உள்ளார்கள் என்பது என்னுடைய தமிழ் திரைப்பட வாழ்க்கையில் மறக்க முடியாத குறிப்பிடத்தகுந்த ஒரு சிறப்புச் செய்தியாகும். அவருக்கும், 55 வருடங்களாக நான் எழுதிய வசனங்களைக் கேட்ட ரசிக பெருமக்களுக்கு இந்த இடத்தில் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியைக் கூற கடமைப்பட்டிருக்கிறேன்'' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக