திங்கள், 13 பிப்ரவரி, 2017

தியாகி சங்கரலிங்கனார் மணிமண்டபம்

தியாகி சங்கரலிங்கனார் மணிமண்டபம்

இவர் 1895ஆம் ஆண்டு, பெரிய கருப்பசாமி நாடார் வள்ளியம்மை தம்பதியினரின் புதல்வராகப் பிறந்தார்.

1914ஆம் ஆண்டு, பெண் கல்வி வளர்ச்சிக்கான சங்கத்தின் செயலாளராகப் பதவி வகித்தார். 1915ஆம் ஆண்டு திருமணம் புரிந்த இவர் 1917ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். 1920ஆம் ஆண்டு இராஜாஜியைச் சந்தித்தபோது அவரது சீடரானார். இவர், மாதர் கடமை என்னும் நூலை எழுதி வெளியிட்டுள்ளார். கதர் இயக்கத்தில் சேர்ந்து, கதர் வளர்ச்சிப் பணியை மேற்கொண்டுள்ளார்.

திருச்சியில் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டமைக்காக 6மாத சிறைத் தண்டனை பெற்றுள்ளார். கரூரில் இக்கட்சியின் சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டமைக்காக இவருக்கு 6 மாத கடுங்காவல் தண்டனையும் 5 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

தேசசேவையின் காரணமாக 1944 ஆம் ஆண்டு மாதம் ரூ.150/- ஊதியத்திலிருந்த வேலையை விட்டு விட்டு திருச்செங்கோட்டிலிருந்த காந்தி ஆசிரமத்தில் ரூ.30/- சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்தார். 1951-ம் ஆண்டு விருதுநகரில் உள்ள சூலக்கரையில் ஓர் ஆசிரமம் அமைத்து செயல்பட்டுள்ளார்.

இன்றைய தமிழகத்தின் பெயர் சென்னை மாகாணம் என இருந்த போது அப்பெயரை மாற்றித் தமிழகம் என பெயரிட வேண்டும் எனக் கோரி 27.07.1956 நாள் முதல் 13.10.1956 முடிய 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்துள்ளார். 10.10.1956 அன்று மதுரையில் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார்.

திருவாளர்கள். கு. காமராஜர், பி.கக்கன், ம.பொ.சிவஞானம், சி.என்.அண்ணாதுரை, ஜீவானந்தம் ஆகியோர் இவரை சந்தித்து உண்ணா விரதத்தை கைவிடும்படி கோரியுள்ளனர். இந்திய வரலாற்றிலேயே தாம் மேற்கொண்ட கொள்கைக்காக காந்திய வழியில் அதிக நாள்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர் விட்டவர் இவர் ஒருவரே ஆவார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களால், நமது மாநிலத்திற்கு சென்னை மாகாணம் என இருந்த பெயரை மாற்றித் தமிழ்நாடு என பெயரிட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதம் மேற்கொண்டு உயிர் துறந்த தியாகி சங்கரலிங்கனார் அவர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில் விருதுநகர் மாவட்டம், விருதுநகரில் ரூ.77.00 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள தியாகி சங்கரலிங்கனார் மணிமண்டபம் 18.06.2015 அன்று திறந்து வைக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக