‘‘காரிருள் அகத்தில் நல்ல
கதிரொளி நீதான்! இந்தப்
பாரிடைத் துயில்வோர் கண்ணில் பாய்ந்திடும் எழுச்சி நீதான்!’’
- என்று இதழியலுக்கு இலக்கணம் தந்தார் பாவேந்தர் பாரதிதாசன்.
ஜனநாயகத்தின் நான்காவது தூணாக இருக்கிற பத்திரிகைகள்தான் மற்ற மூன்று தூண்களில் படிந்துவிட்ட தூசிகளைக்கூட துடைக்கும் தகுதி பெற்றவையாக இருக்கின்றன.
ஆனால், இன்று பத்திரிகைகளை, பத்திரிகையாளர்களை ஆட்சியாளர்கள், அரசியல்வாதிகள் அப்படி நினைப்பதும் இல்லை...
மதிப்பதும் இல்லை.
தாங்கள் உதிர்க்கும் அபத்தமான பொன்மொழிகளை, தாங்கள் வெளியிடும் உதவாக்கரை அறிவிப்புகளை, தாங்கள்செய்யும் பப்ளிசிட்டி கும்மாளங்களை மட்டும் இந்தப் பத்திரிகைகள் வெளியிட்டால்போதும் என்று ஆட்சியாளர்களும், அரசியல்வாதிகளும் நினைக்கிறார்கள்.
அப்படி நடந்துகொள்ளும் பத்திரிகைகளை, பத்திரிகையாளர்களை மட்டுமே மதிக்கிறார்கள். ஆனால் பெருந்தலைவர் காமராஜர், அனைத்துப் பத்திரிகைகளையும் பத்திரிகையாளர்களையும் சக பயணியாக நினைத்து நடத்தினார்.
‘நியூயார்க் டைம்ஸ்’ அந்தோணி லூகாஸ், ‘பிளிட்ஸ்’ கே.ஏ.அப்பாஸ், ‘மிரர்’ அர்ஜுன் தேவ், சிங்கப்பூர் ‘தமிழ்முரசு’ ராதாகிருஷ்ணன், ‘பாரதம்’ பி.எஸ்.ராஜகோபாலன், ‘மெயில்’ கணபதி, ‘மக்கள் குரல்’ மு.காமராஜுலு, எம்.சண்முகவேல், ‘நியூவேவ்’ கிரிஷ்மாத்தூர், சக்ரவர்த்தி ஐயங்கார், ஏ.கே.வெங்கடேசன், ‘தினமணி’ ஏ.என்.சிவராமன், ஆர்.ராமச்சந்திர ஐயர், ‘இந்து’ எஸ்.சீனிவாசன், ‘சுதேசமித்ரன்’ என்.எஸ்.பார்த்தசாரதி, ‘நவசக்தி’ சங்கமேசுவரன், ‘நவ இந்தியா’ மு.நமசிவாயம், முருக.தனுஷ்கோடி, அருண் என்ற அருணாசலம், நா.கிருஷ்ணமூர்த்தி, ‘தினச்சுடர்’ ஆர்.சங்கரநாராயணன், ‘தினசரி’ டி.எஸ்.சொக்கலிங்கம், ‘தினசரி’ டி.சடகோபன், ‘பாரததேவி’ முருகன், ‘நவமணி’ ராமலிங்கம், ‘அலை ஓசை’ நாராயணன், எம்.பி.மணி, எ.பரசுராமன், ‘ஜனசக்தி’ அறந்தை நாராயணன், ‘மெயில்’ எஸ்.ராமநாதன் ‘சண்டே டைம்ஸ்’ பாலு, ‘நவசக்தி’ அ.சத்தியமூர்த்தி, சாவி, ‘துக்ளக்’ சோ, ‘கல்கண்டு’ தமிழ்வாணன், ‘சிவாஜி ரசிகன்’ சின்ன அண்ணாமலை புகைப்படக் கலைஞர் ‘சுபா’ சுந்தரம், ‘தினத்தந்தி’ சோமு, ‘ஜனயுகம்’ மயிலை நாதன், ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ வி.கே.நரசிம்மன், ‘நாத்திகம்’ பி.ராமசாமி, ‘பி.டி.ஐ’ கே.ஆர்.நாயர், ‘சமாச்சார்’ கே.வி.நாராயணன், ‘செய்தி’ பழ.நெடுமாறன், ‘தீபம்’ நா.பார்த்தசாரதி, ‘சுதேசமித்ரன்’ எஸ்.வின்சென்ட், ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ என்.வேம்புஸ்வாமி, ‘அண்ணா’ வீ.ரங்கநாதன், ‘ஆனந்த விகடன்’ ராவ் என்ற ராகவேந்திர காவளே, ‘அம்பி’ என்ற ஜகந்நாதன்... இவர்கள் அனைவருமே காமராஜரின் நண்பர்கள். தோழர்கள். சகாக்கள். பத்திரிகையாளர்கள்!
எந்த ஊருக்குப் போனாலும் அந்த ஊர் நிருபர்களை அழைத்து அந்த ஊரைப் பற்றி விசாரிப்பார் காமராஜர். ‘இந்த ஊரில் முக்கியமான பிரச்னை என்ன?’ என்று கேட்பார். ‘மக்களின் நாடியைப் பிடித்துப் பார்க்கிறவர்கள் நீங்கள்தானே’ என்பார். ‘நீங்கள் எதைப் பற்றி வேண்டுமானாலும் என்னிடம் கேட்கலாம்’ என்பார்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்தபோதும், தமிழ்நாடு முதலமைச்சராக இருக்கும்போதும், அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்தபோதும் - எப்போதும் நிருபர்கள் சந்திப்பை காமராஜர் தவிர்க்கவே இல்லை.
‘ஐயா உங்களை எப்போது சந்திக்கலாம்?’ என்று நிருபர்கள் கேட்டால், ‘உங்களுக்கு எப்போதெல்லாம் தேவையோ அப்போதெல்லாம் சந்திக்கலாம்’ என்றார்.
நிருபர்கள் கூடியதும், தான் தெரிந்துகொள்ள வேண்டியவற்றை அவர்களிடம் கேட்டுவிட்டு, பிறகுதான் பேட்டியைத் தொடங்குவார்.
நிருபர்கள் கேட்கும் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் சொல்வார். இறுதியில், எதையெல்லாம் போட வேண்டாம் என்று நினைக்கிறாரோ, அதைச் சொல்லி ‘இதையெல்லாம் பிரசுரிக்க வேண்டாம்’ என்பார். ‘இதெல்லாம் நீங்க தெரிஞ்சுக்க வேண்டிய விஷயங்கள் என்பதற்காகச் சொன்னேன்.
பிரசுரிப்பதற்காக அல்ல’ என்பார். ஒரு மணி நேரத்துக்கு மேல் நிருபர்களிடம் பேசிவிட்டு, ‘இதில் எதையுமே போட வேண்டாம்’ என்றும் சொல்லி இருக்கிறார்.
‘வெளியிட வேண்டாம்’ என்று காமராஜர் சொன்ன செய்திகள் சில, டெல்லி பத்திரிகைகளில் வெளியாகிவிட்டன. சென்னை நிருபரின் அண்ணன், டெல்லியில் இருந்தார். அவர் மூலமாகப் போயிருக்கும் என்று காமராஜர் சந்தேகப்பட்டார்.
அதுதான் உண்மை. அடுத்த நிருபர்கள் கூட்டத்தில், அந்த நிருபரை அழைத்து, ‘உங்களிடம் நேர்மை இல்லை. அதனால் நீங்கள் வெளியேறிவிடுங்கள்’ என்று சொல்லிவிட்டார்.
எல்லா நிருபர்களையும் பெயர் சொல்லி அழைப்பார். நிருபர்கள் தங்களை அறிமுகம்செய்ய பெயரைச் சொன்னால், ‘உன்னைத் தெரியும். உட்கார். வந்த விஷயத்தைச் சொல்லு’ என்பார்.
சுற்றுப்பயணங்களின்போது நிருபர்களை உடன் அழைத்துச் செல்வார். அவர்கள் சாப்பிட்டார்களா, படுக்க சரியான இடம் இருக்கிறதா என்று நேரடியாகப் பார்ப்பார்.
ஒரு நிருபர் சாப்பிடாமல் செய்திகொடுக்கப் போய்விட்டார். துடித்துவிட்டார் காமராஜர். ஒரு தமிழ் நிருபரை திருவனந்தபுரத்தில் பார்த்தார். விமானத்தில் தன்னோடு அழைத்து வந்துவிட்டார்.
தான் பேசப்போன கூட்டத்துக்கு அருகில் எதிர்க் கட்சியின் கூட்டம் நடப்பதைப் பார்த்து கூட்ட அமைப்பாளரிடம் கோபப்பட்டு, ‘இங்கு பேசமாட்டேன்’ என்று கோபம் ஆகி காரில் கிளம்பிய காமராஜர், அந்த இடத்தில் நிருபர் ஒருவர் நிற்பதை பார்த்து, ‘வண்டியில ஏறிக்க’ என்று சொல்லி ஏற்றிக்கொண்டார்.
கோபம் வந்தால், அவர் அருகில் யாரும் போகமாட்டார்கள். ஆனால், அந்தக் கோபத்திலும் நிருபரை தனது காரில் ஏற்றிக்கொண்டார்.
காசா சுப்பா ராவ் என்ற நிருபர் பிரிட்டன் போய்விட்டு வந்தார். நிருபர் கூட்டத்தில் அவரைப் பார்த்த காமராஜர், ‘பிரிட்டன்ல அரசியல் எப்படி இருக்கு, தேர்தல் எப்படி நடத்துறாங்கன்னு சொல்லுங்க கேட்போம்’ என்றார்.
நிருபர்களோடு அவரும் உட்கார்ந்து கேட்டார். சுப்பா ராவ் சொல்லி முடித்த பிறகுதான் பேட்டி ஆரம்பம் ஆனது. மயிலைநாதன், காமராஜரை மிகக் கடுமையாக விமர்சித்து எழுதிவிட்டார். பிறகு மயிலைநாதன், காமராஜரைப் போய் பார்த்தார். அப்படி ஒரு சம்பவமே நடக்காதது மாதிரி பேசினார் காமராஜர். ‘ஜனசக்தி’ இதழில் ‘எரிமலை’ என்ற தலைப்பில் காமராஜரைக் கிழித்து தொங்க விட்டுக்கொண்டு இருந்தார்
அறந்தை நாராயணன். கம்யூனிஸ்ட் தலைவர் பாலதண்டாயுதம், காமராஜரை சந்திக்கச் சென்றபோது அறந்தை நாராயணனை அறிமுகம் செய்துவைத்தார்.
‘‘தெரியுமே! ‘எரிமலை’யைப் படிக்கிறேனே!’’ என்றார் காமராஜர். எவரையும் பொசுக்கும் அறந்தையின் பேனா, ‘‘நான் தலைகுனிந்து நின்றேன்’’ என்று எழுதியது.
இவ்வளவு நட்பு பாராட்டியதற்குக் காரணம் அவர்களைவைத்து தனக்குச் சாதகமான செய்தி போடுவதற்கா?
கோவில்பட்டியில் இருந்து திருநெல்வேலி போகும்போது பள்ளத்தில் கார் உருண்டு காமராஜருக்கு பயங்கர காயம். ரத்தம் ஒழுகியது. லேசாக நினைவு திரும்பியதும் ‘தென்னகம்’ ஜி.ஆனந்தனை அழைத்து, ‘இந்த விபத்துச் செய்தியை பெருசா போடாதேண்ணேன்’ என்றார்.
காமராஜர் போபால் வருகிறார் என்பதைத் தெரிந்துகொண்டு ‘மெயில்’ இதழில் அவரை பாராட்டி கணபதி எழுதினார். போபால் வந்த காமராஜர், கடுமையாக அவரை கோபித்துக் கொண்டார். ‘நீங்கள் அதிர்ச்சி அடையறது மாதிரி நான் ஏதும் எழுதலையே’ என்றார்
கணபதி. ‘என்னைப் பாராட்டி எதுக்கு எழுதுறீங்க? இதெல்லாம் எனக்குப் பிடிக்காது’ என்கிறார் காமராஜர். ‘குமுதம்’ தொடருக்காக ஆசிரியர் எஸ்.ஏ.பி.அண்ணாமலையும் பத்திரிகையாளர் மு.நமசிவாயமும் சந்தித்தபோது, ‘என்னைப் பெருமைப்படுத்தி எழுதுவதற்காக மற்றவர்களைச் சிறுமைப்படுத்தி எழுதிவிடக் கூடாது’ என்று கட்டளையிட்டார்.
அண்ணாவும், காமராஜரும் திடீரென ஒருநாள் சந்தித்தார்கள். இந்தச் செய்தியை காங்கிரஸ் ஆதரவு இதழான ‘நவசக்தி’க்கு காமராஜரே போன் செய்து சொன்னார். இந்தச் செய்தியை எழுதிய நிருபர் அதைச் சரியாக எழுதவில்லை. ஆசிரியர் குழுவே காமராஜரிடம் மன்னிப்பு கேட்டது. ‘‘பத்திரிகை தொழிலைப் பற்றி எனக்குத் தெரியும். அவசரத்துல இதெல்லாம் சகஜம்’’ என்று அனுப்பிவிட்டார்.
எது செய்தியாக வேண்டும், எது செய்தியாகக் கூடாது என்பதை உணர்ந்தும், உணர்த்தியும் பத்திரிகையாளர்களை மதித்தார் காமராஜர்.
‘உழைக்கும் பத்திரிகையாளர் சங்க’த்தில் இருந்ததால் பிரபல நாளிதழில் இருந்து நடவடிக்கை எடுக்கப்பட்டார்
எம்.சண்முகவேல். முதலமைச்சர் காமராஜரிடம் போய் சண்முகவேல் இதைச் சொன்னார். தொழிலாளர் அமைச்சர் ஆர்.வெங்கட்ராமனையும், சட்ட அமைச்சர் சி.சுப்பிரமணியத்தையும் வரவைத்துப் பேசினார் காமராஜர்.
நாளிதழ் நிர்வாகத்திடம் பேசி இழப்பீடு வாங்கித்தந்தார். தொழிலாளர் போராட்டம் காரணமாகப் பல்வேறு பத்திரிகைகளில் இருந்து விலகிய பத்திரிகையாளர்கள் சேர்ந்து கூட்டுறவுச் சங்கம் தொடங்கி அதன் மூலமாக ‘நவமணி’ என்ற நாளிதழைத் தொடங்கினார்கள்.
அவர்களுக்கு பல உதவிகள் செய்தவர் காமராஜர். அது பக்தவத்சலம் முதல்வராக இருந்த காங்கிரஸ் ஆட்சி. அரிசி பஞ்சம், இந்தி போராட்டம் குறித்து காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக ‘நவமணி’ எழுதியது.
அரசின் கூட்டுறவுச் சங்கம் மூலம் நடத்தும் இதழ், அரசை எதிர்த்து எழுதலாமா என்று காமராஜரிடம் புகார் சொன்னார்கள்.
அவர் அதைப் பொருட்படுத்தவே இல்லை. ‘அது அவர்களது உரிமை’ என்றார்.
தி.மு.க ஆட்சியில் ‘அலை ஓசை’ நாளிதழுக்கு நெருக்கடி தரப்பட்டது. அப்போது ‘அலை ஓசை’ இதழை தனது ‘நவசக்தி’ அச்சகத்தில் அச்சடித்துத் தர காமராஜர் உதவினார். ‘அலை ஓசை’ அலுவலகம் தாக்கப்பட்டு, வேலூர் நாராயணன் காயம் அடைந்தபோது, அவர்களுக்கு இருந்த ஒரே காவல் அரண் காமராஜர்தான்.
அதிகம் பகிருங்கள்...!!!
*தமிழ்நாடு நாடார் சங்கம்#
முத்துரமேஷ்நாடார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக